Marakatha Naanayam Movie Review

கதையின் ஹீரோ ஆதி வேலை கிடைக்காமல் பணத்திற்காக நண்பனுடன் சேர்ந்து சிறு சிறு கடத்தல்களில் ஈடுபடுகிறார். பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கிறது. மரகத நாணயம் பற்றி கேள்விப்பட்டு அதன் மீதுள்ள மோகத்தால் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அதை எடுக்க கூலிப்படையை நாடுகிறார். ஆனால் மரகத நாணயம் என்றதுமே எல்லோரும் பின்வாங்குகிறார்கள். அதை தொட்டவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரையும் பயம் காட்டுகிறது. கடைசியில் இந்த ஆர்டர் மைம் கோபி மூலம் ஆதிக்கு கிடைக்க இவர்நா ணயத்தை எடுப்பதற்காக அதை தேடி அலைகிறார். பல உண்மைகள் அப்போது வெளிவருகிறது. மரகத நாணயம் எப்படி வந்தது ? அதன் பின்னணி என்ன, ஆதியின் கைக்கு அது கிடைத்ததா, அவர் உயிருக்கு ஆபத்து வந்ததா என்பதே கதை.

ஹீரோ ஆதி தமிழில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என இம்முறையும் முயற்சி செய்துள்ளார். படத்தின் முதல் சில காட்சிகளில் மட்டும், உயிரோடு வரும் கதாநாயகி (நிக்கி கல்ராணி) பிறகு ஆண்குரலில் பேசும் பேயாகத்தான் படம் முழுக்க வருகிறார். கதாநாயகி பாத்திரத்தில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒப்புக்கொண்டு, அதை ரசிக்கும்படியும் செய்திருக்கிறார் நிக்கி.

படத்தின் மற்றொரு பலம், தாதாவாக வரும் ஆனந்த்ராஜ். வசனத்திலும் உடல்மொழியிலும் பிரமாதப்படுத்துகிறார். அவருக்கான காட்சியமைப்புகளும் அட்டகாசம். தான் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஒரு ஸ்பீக்கரையும் தன்னுடைய கோமாளி அடியாள்களையும் அனுப்பி டிவிங்கிள் ராமநாதன் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது.

உயிரோடு ராமதாஸ் என்ற கடத்தல்காரன், இறந்த பிறகு சிதம்பரம் என்பவரின் பேய் என இரண்டு பாத்திரங்களில் வரும் முனீஸ்காந்த், நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வரும் எம்.எஸ். பாஸ்கர், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரும் படம் முழுக்க வரும் மைம் கோபியும் அவ்வப்போது நிமிர்ந்து உட்காரவைக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சி நாடக பாணியில் அமைக்கப்பட்ட காட்சிகள், துவக்கத்தில் ரொம்பவும் வேகவேகமாக முன்கதையைச் சொல்வது, பிறகு மிக மிக மெதுவாக நகரும் திரைக்கதை என படம் பார்ப்பவர்களை சோதனைக்குள்ளாக்கும் அம்சங்களும் படத்தில் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *