Kavan Movie Review

தூர்தர்ஷன் காலத்தில் செய்தி வெறும் நடப்பு செய்தியாக இருந்தது. ஆனால் இன்றோ பரபரப்பான பிரேக்கிங் நியுசுக்கு அடிமையாகிவிட்ட பார்வையாளர்களை எப்படி தங்கள் சேனலையே பார்க்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும், டிஆர்பி ரேடிங்கை உயர்த்தவும் தகிடு தத்தம் வேலை செய்யும் இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் உண்மை முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவர் கதைக்கு உதவி எழுத்தாளர் சுபா.

ஒரு நல்ல ஊடவியலாளராக வர உழைக்கும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. முதலில் வரும் கெட் அப்பில் நன்றாக இருக்கிறார். அப்படியே தொடர்ந்து இருந்திருக்கலாம். ஒரு மாறுதலான முக அமைப்பைப் புது சிகை அலங்காரம் அவருக்குக் கொடுத்தது. மெருகேறிய நடிப்பு விஜய் சேதுபதிக்கு. அவருக்குத் துணை பாத்திரமாக மடோன்னா செபாஸ்டியன். அவரும் மிகவும் நன்றாக நடிக்கிறார். டண்டணக்கா டணக்குணக்கா என பாத்திரக் கடைக்குள் யானை புகுந்தார் போல டி.ஆர் எட்டு வருடத்திற்குப் பிறகு ரீ என்டிரி!

ஆகாஷ்தீப் செய்கால் அயன் படத்தில் வில்லன், இந்தப் படத்திலும் அவரே. நன்றாக தடித்து வயதும் ஏறியிருக்கிறார். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் தானே. ரொம்ப சுமாரான நடிப்பு. இவரைத் தவிர நாசர், ஜெகன், விக்ராந்த், பாண்டியராஜன் & நமது ட்விட்டர் கிரேசி கோபாலும் நடித்துள்ளனர். பாண்டியராஜனின் குரலில், வார்த்தை உச்சரிப்பில் அவ்வளவு தெளிவில்லை.

இசை ஹிப் ஹாப் தமிழா. ஆக்சிஜன் பாடல் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கே.வி.ஆனந்த் எடிட்டிங், ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை. தேவையற்ற இடங்களில் பாடல்களும் நடனங்களும் படத்தில் தோவை ஏற்படுத்துகின்றன.

உண்மைக்கு முக்கியத்துவம் தராமல் பணத்துக்காக எப்படி ஊடக இயக்குநர்கள் எந்தக் கீழ் தரத்துக்குப் போகவும், குற்றம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கதைக் கரு. பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணுக்கு ஊடகங்கள் எப்படி தனி மனித அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காமல் வெட்ட வெளியில் போட்டுடைக்கின்றன, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் கஷ்டம் இவை காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *