Actor Sivakumar Press Release

பிராணாயாம அறிவியல் நூல் வெளியீட்டு விழா

அமெரிக்கத் தமிழ் விஞ்ஞானியான டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள PRANASCIENCE என்ற நூலின் வெளியீட்டு விழாவனது சென்னை இரஷியக் கலாச்சார மையத்தில் இன்று (29-1-2017 காலை 10 மணி முதல் 1 மணி வரை) நடைபெற்றது. இந்த நூல் திருமூலரின் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவிலுள்ள தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இவர் நிகழ்த்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் தொகுப்பாகும். இவரது ஆராய்ச்சியிலிருந்து திருமூலர் கூறியபடி மூச்சுப் பயிற்சியினை மேற்கொள்ளும்போது நம் உடலில் நிறைய வேதி மாற்றங்கள் நிகழ்வதாக அறியமுடிகின்றது. குறிப்பாக உமிழ்நீரில் நரம்பு வளர்ச்சியினைத் தூண்டக்கூடிய nerve growth factor என்ற புரதமும், மற்றும் புற்று நோயை மட்டுப் படுத்தக்கூடிய புரதங்களும், நோய் எதிர்ப்புத் தன்மையைத் தூண்டக் கூடிய புரதங்களும் உற்பத்தியாவதை இவர் கண்டறிந்தார். மேலும் திசுக்களில் ஏற்படும் சிதைவுகளைத் தடுத்து நீண்டநாள் நலத்துடன் வாழ வகை செய்யும் வேதி மாற்றங்களும் உடலில் நிகழ்வதை இவரது  ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து முன்னர் இவர் நிகழ்த்திய உரையை இந்த இணைப்பில் காணலாம் (https://www.youtube.com/watch?v=aIfwbEvXtwo). இத்தகைய செய்திகளையும், திருமந்திரத்திலிருந்து பிராணாயாமம் குறித்த 14 பாடல்களையும் அவற்றின் அறிவியல் ரீதியான உட்பொருளையும் இந்நூல் விளக்குகிறது. Notion Press நிறுவனத்தின் வெளியீடான இந்நூல் உலக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. இந்நூலைத் திரைப்பட நடிகர், ஓவியர், யோக விற்பன்னர் போன்ற பன்முகங்களைக் கொண்ட திரு சிவக்குமார் வெளியிட, யோக ஆசான் திரு வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திருமூலர் அறக்கட்டளையின் தலைவர் திரு கே.எம். பெரியசாமி அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். விழாவிற்குத் தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் செ. தாமோதரன் அவர்கள் தலைமை தாங்கினார். இன்னிசையேந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். திரைப்பட நடிகர் வி.டி.எம் சார்லி, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி வனிதா ஐ.பி.எஸ், இலக்கியவாணி திருமதி புனிதா ஏகாம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருமூலர் அறக்கட்டளையின் சார்பில் திரு எஸ். குமார் அவர்கள் வரவேற்புரையையும், யோகக் கல்வி அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் நி. தங்கமணி அவர்கள் நன்றியுரையையும் வழங்கினார்கள். விழாவின் தொடக்கத்தில் ஶ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவணக்கப் பாடலை ஆதித்யா கிருஷ்ணன் பாடினார். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்குத் திருமூலர் அறக்கட்டளை சார்பில் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவைப் பல பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பதிவு செய்தன. PRANASCIENCE என்ற இந்நூல் இணையத்தின் வாயிலாகவும், Notion Press வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *