யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம் ‘ராட்சசன்’ – ஜி. டில்லி பாபு!

சமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் ராட்சசன் படத்தையும் தேர்வு செய்தோம். நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். ராட்சசன் யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை யூகிக்க வைத்துக் கொண்டே இருக்கும். எங்களுக்கு நெருக்கமான சிலருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தபோது, ஒரே குரலாக அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “ராட்சசனின் அற்புதமான திரைக்கதையை பாராட்டுவதற்கு முன்பு இயக்குனர் ராம்குமாரிடம், ‘முண்டாசுப்பட்டி’ போன்ற நகைச்சுவை படத்துக்கு பிறகு எப்படி இந்த மாதிரி ஒரு திரில்லர் கதையை எழுத முடிந்தது என்று கேட்டேன். அவர் அதற்கு, ‘இந்த கதையை எழுதி முடித்த பிறகு பலரும், இந்த படம் வேண்டாம் என்று சொன்னதோடு ஒரு காமெடி படத்தை இயக்கச் சொன்னார்கள். ராட்சசன் ஒரு வழக்கமான கிரைம்-த்ரில்லர் படம் அல்ல. படத்தில் நிறையவே எமோஷன் உண்டு என்று நான் உறுதியாக கூறுவேன்’ என்றார்.

தனது படக்குழுவினரைப் பற்றி பாராட்டி பேசும்போது, “படக்குழுவை பற்றி பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. அவருக்கு ஒலி மற்றும் ஒலியை இசையுடன் கலப்பதில் நல்ல அறிவாற்றல் இருப்பதால் அது திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்க்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *