மும்பை ஆசிய குறும்பட விழாவில் ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ பல விருதுகளை குவித்திருக்கிறது

‘மும்பை ஆசிய குறும்பட விழா’, மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள்.

சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்திருந்தனர். மும்பை ரவிந்திரா நாட்டிய அரங்கில் இந்த விருது விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பானு பிரகாஷ் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் தன் வசமாக்கினார். பானு பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான குணச்சித்திர நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர் என்பதும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற பானு பிரகாஷ் பேசும்போது, “இந்த குறும்படத்தில் இந்த கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குனர் பிரமோத்துக்கு நன்றி. தன் மகனின் நடத்தை மற்றும் தவறான செயல்களால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப்படும் தந்தையாக ஒரு அழுத்தமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனது நிஜ வாழ்வில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதால் கதையை உணர்வதோடு, சிறப்பான நடிப்பை கொடுக்கவும் முடிந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பு துறையில் நடிகராக இருந்தாலும், கேமரா முன்பு நின்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வாழ்வது என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சினிமாவோ, குறும்படமோ இந்த மாதிரியான அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *