நான் தான் ஷபானா திரை விமர்சனம்

மும்பையில் டாப்சி தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இயல்பாகவே மிகவும் தைரியமான பெண்ணான டாப்சி, குடோ என்ற தற்காப்புக்கலை பயிற்சியாளராவார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் டாப்சியை அதே கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவர் காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் டாப்சியை உளவு பார்த்து, டாப்சி குறித்த தகவல்களை ரசிகசியமாக சேகரிக்கிறார். பின்னர் ஒருநாள் டாப்சியும், அந்த இளைஞரும் ஒன்றாக வெளியே செல்லும்போது, அவர்களை ஒரு கும்பல் மறித்து கிண்டல் செய்கிறது. இதனால் கோபமடையும் டாப்சி, அந்த கும்பலுடன் சண்டை போடுகிறாள். டாப்சியை காதலிக்கும் இளைஞர், அந்த கும்பலால் கொல்லப்படுகிறார்.

டாப்சி போலீசில் புகார் அளிக்க, மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். இவ்வாறு தனது காதலரை இழந்து, கவலையில் ஆழ்ந்திருக்கும் டாப்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. டாப்சியை உளவு பார்த்த இந்தியாவின் ரகசிய ஏஜென்சியில் இருந்து மனோஜ் பாஜ்பாய், டாப்சியிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர், டாப்சியின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவ வேண்டுமானால் அவர்கள் கொடுக்கும் வேலையை டாப்சி செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கூறுகிறார். இதனையடுத்து, இந்த ஒப்பந்ததத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் டாப்சி, அவளது காதலரை கொன்றவர்களை பழிவாங்குகிறாள். டாப்சிக்கு அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் உதவி செய்கின்றனர். இதையடுத்து டாப்சிக்கு மனோஜ் பாஜ்பாய் என்ன வேலை கொடுக்கிறார்? மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலையை டாப்சி செய்தாரா? அதன் பின்னணியில் யார் யார் இருகிறார்? என்ன நடந்தது?

கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டாப்சி அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார் சண்டைக்காட்சிகளில் அவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. சிறப்பு தோற்றத்தை ஏற்று நடித்திருப்பதற்காக அக்‌ஷய் குமாருக்கு முதலில் ஒரு பாராட்டை தெரிவிக்கலாம். அவரது வருகைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. படத்தின் இரண்டாவது பாதியில் முக்கியமான காட்சிகளில் வந்து அசத்தியிருக்கிறார். பிரித்விராஜ் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாவது பாதியில் மட்டும் டானாக வரும் அவர் கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

நீரஜ் பாண்டே திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளது படத்திற்கு பலம் என்றாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பது ஒருவித கடுப்பை கூட்டுகிறது. சஞ்சோய் சவுத்ரியின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. சுதிர் பால்சேனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *