தடம் விமர்சனம்

நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் ஒன்று நிரபராதி எந்த காரணத்தை முன்னிட்டும் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். இந்த ஓட்டையை வைத்து ஒரு குற்றவாளி எப்படி தப்பிக்கின்றான் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை எழில் என்ற அருண்விஜய் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடத்தி வருகிறார். அவர் தனது வேலை, காதல் என சுமூகமாக அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் அவருடன் இரட்டைக்குழந்தையாக பிறந்த கவின் என்ற அருண்விஜய் யோகிபாபுவுடன் சேர்ந்து கொள்ளை அடித்து வாழ்க்கையை ஜாலியாக ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஆகாஷ் என்ற இளைஞன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த இளைஞனை கொலை செய்தது இரண்டு அருண்விஜய்களில் ஒருவர் என்ற ஆதாரம் போலீசுக்கு கிடைக்கின்றது. ஆனால் இரண்டு பேர்களில் யார் உண்மையான கொலையாளி என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது கவின், எழில் இருவரில் யார் கொலையாளி? ஏன் கொலை செய்தார்? தண்டனையில் இருந்து தப்பினாரா? சிக்கினாரா? இந்த வழக்கின் தீர்ப்பு என்ன? தீர்ப்புக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை!

என்னதான் இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் உருவத்தில் மட்டுமே ஒற்றுமை இருக்கும், பழக்கவழக்கங்கள், குணங்கள் வேறுபாடாக இருக்கும் என்பதை அருண்விஜய் தனது இரட்டை வேட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் அருண்விஜய், ரொமான்ஸ் காட்சிகளிலும் தேறுகிறார். சுருக்கமாக சொன்னால் அருண்விஜய் இந்த படத்தின் மொத்த சுமையையும் தாங்கிப்பிடித்துள்ளார்.
இந்த படத்தின் இரண்டு நாயகிகளின் காட்சிகளும் படத்தின் மெயின் கதைக்கு அதிக சம்பந்தம் இல்லாமல் இருப்பதால் மனதை கவரவில்லை. ஆனால் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் வித்யா பிரதிபா காட்சிகள் படத்திற்கு பலம். சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பு சுமார். யோகிபாபு காமெடி எடுபடவில்லை

அருண்ராஜ் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. ஆனால் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. சண்டைக்காட்சிகள் குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் இரு அருண்விஜய்யும் மோதும் காட்சி சூப்பர்
ஒரே உருவத்துடன் உள்ள இருவரில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால் என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பதை இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்து இயக்குனர் மகிழ்திருமேனி திரைக்கதை எழுதியுள்ளார். தீர்ப்பு காட்சி வரை
உண்மையான கொலையாளி எந்த அருண்விஜய் என்பதை ஊகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றது அவரது திரைக்கதையின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதை மற்றும் கிளைமாக்ஸ் தமிழில் இதுதான் முதல்முறையாக இருக்கும். முதல் பாதியில் சில தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்வதால் த்ரில் பட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சரியான விருந்தாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *