சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர்- 3 : வானமே எல்லை : ரீச் தி பீச் – ரெயின்ட்ராப்ஸின் முயற்சி

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்குஇலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளிதிட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.
பன்முகத் திறன் கொண்ட இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பான ரெயின்ட்ராப்ஸ், சர்வதேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர்- 3 -ந்தேதி வானமே எல்லை : ரீச் தி பீச் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் மாண்பை கொண்டாடினர். கடந்த ஆண்டு இதே நாளில் மாற்றுத் திறனாளிகளை போற்றும் வகையில் ரெயின்ட்ராப்ஸ் தீம் பாடல் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் “அனைவரும் ஒன்றிணைந்தால் அவர்களுக்கான சிறந்த உலகை உருவாக்க முடியும்” என்பது தான். மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளுதல், அவர்களை கண்ணியத்துடன் நடத்துதல், அவரது உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான அடித்தளத்தை மீட்டுத் தருதலே உயர்நோக்கமாகும். உடல் ஊனம் கொண்ட போதும் மனோதிடத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் துடிப்பான அங்கத்தினராக இருக்க முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு இந்த உண்மை விளங்குவதில்லை. அதனாலேயே, மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் பார்வையில் பாகுபாட்டுடன் பார்க்கப்படுகின்றனர். மறுபுறம் மாற்றுத் திறனாளிகள் இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி, உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் பல சாதனைகள் புரிகின்றனர். மாற்றுத் திறனாளிகள் தம் சுய மரியாதையைக் கொண்டு மனச்சோர்வினை விரட்டும் வகையில் வானமே எல்லை நிகழ்ச்சி அமைகிறது. முரண்பாடுகளை களைந்து, அவர்களும் சமூகத்தில் எவ்வித பாகுபாடும், மனக் கஷ்டங்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றுரைக்கிறது. மாற்றுத் திறனாளிகள் பொதுவெளியில் செல்லும் போதும், பயணங்களின் போதும் இன்னொருவர் துணையை நாட வேண்டியுள்ளது. தற்போது வேலை செய்யும் அலுவலகங்கள், பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் போது அத்தைகைய வசதிகளை எதிர்ப்பார்ப்பதற்கில்லை. உலகளவில் லட்சக்கணக்காண மாற்றுத் திறனாளிகள் சுலபமாக எங்கும் வெளியில் செல்ல முடியாத, பயணம் செய்ய முடியாத நிலையே இன்றளவும் தொடர்கிறது. கடற்கரைக்குச் செல்ல வேண்டும், ஈர மணலில் அமர்ந்து கடலலையை ரசித்தபடி அதில் கால் நனைக்க வேண்டும் என்பது எண்ணற்ற மாற்றுத் திறனாளிகளின் கனவாகும். ஆனால் பலருக்கு அது நிறைவேறாத கனவாகவே உள்ளது. கடற்கரை மணலில் சக்கர நாற்காலியில் செல்வதோ, நடந்து செல்வதோ அவர்களுக்கு சிரமமான காரியம். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று அவர்களது கனவை நனவாக்க ரெயின்ட்ராப்ஸ் கடற்கரை மணலில் தற்காலிக நடைமேடை அமைத்து சக்கர நாற்காலிகளில் அவர்களை அமர்த்தி கடற்கரையினுள் அழைத்துச்சென்று கடல் அலைகளில் கால் நனைக்கச் செய்து மகிழ்ச்சியில் மனம் நனையச் செய்தோம் என்றார் ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.

காவல்த்துறை துணை ஆணையாளர் ரோஹித், விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், எஸ்னோரா அமைப்பின் நிறுவனத்தலைவர் எம்பி நிர்மல் ,இயற்கை விஞ்ஞானி சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், திரைப்பட நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *